செய்திகள் :

காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்: பால்புதுமையினர் குறித்து அவசியமானதொரு உரையாடல்; சினிமாவாக எப்படி?

post image

தன் காதலைத் தாயார் லட்சுமியிடம் (ரோகிணி) தயங்கிக்கொண்டே சொல்கிறார் சம்யுக்தா (லிஜொமோல் ஜோஸ்). எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது காதலனை, மதிய விருந்துக்கு வீட்டிற்கு அழைத்து வருமாறு சொல்கிறார் லட்சுமி. சம்யுக்தாவின் அழைப்பை ஏற்று ரவிந்திரா (கலேஷ்), நந்தினி (அனுஷா பிரபு) ஆகிய இருவரும் அம்மாவைக் காண வீட்டிற்கு வருகிறார்கள். அங்கே அவர்களுக்குள் நடக்கும் உரையாடலில் சம்யுக்தா காதலிப்பது ரவிந்திராவை அல்ல, நந்தினியை என்பது புரிகிறது. உடனே இந்த தன்பாலின ஈர்ப்பு காதலை லட்சுமி கடுமையாக எதிர்க்க, அனைத்து கதாபாத்திரங்களும் தங்களின் வாத, பிரதிவாதங்களை முன்வைக்கின்றனர். இறுதியில் இந்த உறவை அந்தக் குடும்பம் அங்கீகரித்ததா என்பதே இந்த 'காதல் என்னும் பொதுவுடைமை' படத்தின் கதை.

தாயிடம் காதலைச் சொல்லுமிடத்தில் பதற்றம், எங்கே நம்மை பிரித்துவிடுவர்களோ என்கிற அச்சம், இதுவும் இயற்கைதான் என்று பேசும் இடத்தில் தைரியமென வானவில்லின் வண்ணமாக நடிப்பில் தூரிகையிட்டு ஜொலிக்கிறார் லிஜொமோல் ஜோஸ். அவரின் காதலியாக வரும் அனுஷா ஒருவித பதற்ற உணர்வுடன் அமைதியாகவே கதை நெடுக பயணிக்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். இதனாலேயே கதையின் பிரதான தேவையான கெமிஸ்ட்ரி சற்றே மிஸ் ஆகிறது. முற்போக்கு சிந்தனை கொண்டவராகத் தன்னை நினைத்துக்கொண்டாலும், தன்பாலின ஈர்ப்பு என்று வருகையில் வெளிப்படும் முரணைக் கோபம், குழப்பம், குறுகிய மனோபாவம் ஆகியவற்றோடு அநாயாசமாகக் கடத்தியிருக்கிறார் ரோகிணி. ஆரம்பக் காட்சிகளில் சற்று ஒட்டவில்லையென்றாலும் ,பார்பி பொம்மையை வைத்து வருகிற காட்சியில் அவரின் அனுபவம் பேசுகிறது. பிரிந்து சென்ற அப்பாவாக வரும் பாத்திரத்தில் கதையில் ஒட்டாதது போலவே, நடிப்பிலும் சில காட்சிகளில் ஒட்டாமல் நிற்கிறார் வினித். நண்பராக வரும் கலேஷ், வீட்டு வேலை செய்பவராக வரும் தீபா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை முதிர்ச்சியாகக் கையாண்டிருக்கிறார்கள்.

ஒரே வீடு, அதற்குள் பல மாந்தர்கள் என்று நகரும் காட்சிகளுக்குச் சிறப்பான கோணங்களில் வலுசேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன். கலங்கிய மனத்தினை உணர்த்தும் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து மேலே முகத்தினைக் காட்டுகிற காட்சி அழகியல். முதல் பாதியில் பல இடங்கள் நேரத்தை நிரப்பும் வேலையோ என்ற உணர்வைத் தருகிறது. படத்தொகுப்பாளர் டேனி சார்லஸ் இதைத் தவிர்த்து இன்னும் நெருக்கமாக வெட்டியிருக்கலாம். கண்ணன் நாராயணனின் பின்னணி இசை மூச்சுவிடும் நேரம் கூட இல்லாமல் எல்லா இடங்களிலும் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் ரிப்பீட் அடிக்கும் பாணியிலான ஒரே மாதிரியான இசை அயர்ச்சியைத் தருகிறது. கிளைமாக்ஸ் இசை கதைக்கு ஏற்ப இருந்தது ஆறுதல். கலை இயக்குநர் ஆறுச்சாமியின் கலை இயக்கத்தில் குறையேதுமில்லை.

'பிரச்னை இதுதான்' என முதல் காட்சியிலேயே சொல்லி நேராகக் கதைக்குள் நுழைகிறது படம். ஆனால் அதுவே பெரிதாகக் கதாபாத்திர அறிமுகத்தினைக் கொடுக்காத செயற்கையான திரையனுபவத்தை கொடுத்து, கதையோடு விலகலை ஏற்படுத்துகிறது. அதேபோல திரைக்கதையில் அவசியமாக இருக்க வேண்டிய காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் சட்டெனத் தோன்றி மறைவது ஏமாற்றமே! ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால் கதாபாத்திர வடிவமைப்பில் ஆழமில்லாத தன்மையும், புற உணர்வை மட்டுமே பேசி அக உணர்வைப் பெரிதாக ஆராயாத தன்மையும் வெளிப்படுகின்றன.

இதை மாற்றும் விதமாக இரண்டாம் பாதி, 'இது இயற்கைக்கு அப்பாற்பட்டதா?', 'யார் தந்தை?', 'இருவரில் யார் மனைவி?', என்று பால்புதுமையினர் குறித்து பொதுச்சமூகம் வைத்திருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை அலசுகிறது. அதைப் பிரசாரமாகக் கொடுக்காமல் முடிந்த அளவு யதார்த்தமாகக் கொடுக்க முயன்றிருக்கிறது இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் திரைமொழி. பால்புதுமையினர் குறித்து போதிய புரிதல் இல்லாத சூழலில் 'நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு' என்பதாக எடுக்கப்பட்ட இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.

தன்பாலின ஈர்ப்பாளர்களில் (லெஸ்பியன்) பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், ஆண்கள் செய்யும் குடும்ப வன்முறைகளை எடுத்துக்காட்டி ஆண்கள் இல்லாமலே வாழ முடியும் என்ற பாணியில் காட்சிகள் விவரிக்கப்படுகின்றன. ஆனால் ஆண்களிலும் இப்படியான தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருக்கிறார்கள் எனும்போது கதை பேச வந்த கருத்தில் சற்றே முரண்படுகிறதோ என்ற எண்ணம் எட்டிப்பார்க்கிறது.

இரு பெண்கள் அவர்களின் பெற்றோரை வைத்துத் தன்பாலின ஈர்ப்பு குறித்துத் தேவையான உரையாடலை நடத்தியிருக்கும் இந்த 'காதல் என்னும் பொதுவுடைமை' நம் வாழ்த்துகள். அதே நேரத்தில் திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பிலும் கூடுதல நம் பெரும் கவனத்தை நிச்சயம் உடைமையாக்கியிருக்கலாம்.

Nayanthara - Vignesh shivan: "ஊர் நடுவினில், ஓர் தெருவினில்..." - காதலர் தின 'டிரெண்டிங்' ரீல்ஸ்!

திரையுலகின் காதல் ஜோடிகளில் எப்போதும் பேச்சுப் பொருளாக இருப்பவர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன். நயன்தாராவுடனான பொழுதுகளை இன்ஸ்டாகிராமில் கொண்டாடித் தீர்க்கும் விக்னேஷ் சிவன், அவருடன் சேர்ந்து காதலர் தி... மேலும் பார்க்க

Kamal Haasan: "தங்க மகள்களுக்குக் காதல்... கவிதை..." - சினேகனின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய கமல்

சினேகன் - கன்னிகா தாம்பதிக்கு 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 25-ம் தேதி இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. இச்செய்தியைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலமாக அற... மேலும் பார்க்க

பேபி அண்ட் பேபி விமர்சனம்: குழந்தை மாறிப் போனதுக்கு இவ்ளோ அக்கப்போரா? காமெடியாவது பாஸாகிறதா?

சென்னை விமான நிலையத்திலிருந்து கோவைக்குச் செல்வதற்காகக் கிளம்பும் சிவாவும் (ஜெய்), மதுரைக்குச் செல்வதற்காகத் தயாராகும் குணாவும் (யோகி பாபு) தங்களது மனைவி குழந்தையுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ... மேலும் பார்க்க