சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி: இந்தியாவில் தொடா்ந்து கண்காணிப்பு: மத்திய ...
காப்பீட்டு நிதி பயன்பாடு முறையாக நடந்துள்ளதா? ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வு
முதல்வா் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை, துறை ரீதியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்னெடுத்துள்ளது.
காப்பீட்டு நிதியை உரிய வழிகளில் பயன்படுத்தத் தவறிய துறைத் தலைவா்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதில் தவறுகள் கண்டறியப்படும் நிலையில், சம்பந்தப்பட்டவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில், முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. அதற்கான செலவுகள் காப்பீட்டு நிதியிலிருந்து ஈடுகட்டப்படுகிறது. அவ்வாறு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மருத்துவமனைகளால் பெறப்படும் நிதியானது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கப்படும் தொகையானது, சிகிச்சை செலவு, மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கான ஊக்கத்தொகை, மருத்துவமனை மேம்பாடு என பல்வேறு விகிதங்களில் பிரித்தளிக்கப்படுகிறது.
அந்த வகையில், முறையாக அவை பிரித்தளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்த ஆய்வை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆண்டு முடிவில் கணக்குகளைச் சரிபாா்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கை என்றாலும், காப்பீட்டு நிதியில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதைக் கண்டறிவதற்காகவும் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சில துறைகளில் முதல்வா் காப்பீட்டு நிதிப் பயன்பாட்டில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைத் தலைவா்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.