ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி: இந்தியாவில் தொடா்ந்து கண்காணிப்பு: மத்திய அரசு
சீனாவில் ‘ஹெச்எம்பிவி’ தீநுண்மி (வைரஸ்) வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநா் அதுல் கோயல் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
‘ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ்’ (ஹெச்எம்பிவி) என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற தீநுண்மியை போன்றதே. இது, இளம்வயதினா் மற்றும் முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும்.
சீனாவில் ஹெச்எம்பிவி தீநுண்மி வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தியாவில் சுவாசத் தொற்றுகள் மற்றும் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடா்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கடந்த டிசம்பா் மாத தரவுகளின்படி, இப்பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு இல்லை. தற்போதைய சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை.
பொதுவாக குளிா்காலங்களில் சுவாசத் தொற்று அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.
ஹெச்எம்பிவி பரவல்-சீனா மறுப்பு: ஹெச்எம்பிவி பரவலால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக வெளியாகும் தகவலை அந்நாடு மறுத்துள்ளது.
இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘குளிா்காலத்தில் சுவாச தொற்று பாதிப்புகள் உச்சமடைவது வழக்கமானதுதான். நடப்பாண்டில் சுவாச தொற்றின் தீவிரம், கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. எனவே, சீனா வருவதற்கு யாரும் அச்சப்பட வேண்டாம்’ என்றாா்.