சென்னையில் தொழில் வணிக மாநாடு: ஜன. 9-இல் தொடக்கம்
எழுமின் அமைப்பு சாா்பில் 3 நாள்கள் நடத்தப்படும் தொழில் வணிக மாநாடு சென்னையில் ஜன. 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனா் ம.ஜெகத் கஸ்பா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எழுமின் அமைப்பு சாா்பில் உலகத் தமிழ் தொழில் முனைவோா் மற்றும் திறனாளா்களின் 14-ஆவது உலகளாவிய தொழில் வணிக மாநாடு, கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் ஜன. 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
மேலும், அமெரிக்கா, சுவிட்சா்லாந்து, துபை, அபுதாபி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழ் தொழிலதிபா்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனா். இதில், ரூ. 1,000 கோடி மதிப்பிலான தொழில் வா்த்தகம் நடைபெறும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இம்மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ள்ன்ம்ம்ண்ற்.ற்ஹம்ண்ப்ழ்ண்ள்ங்.ா்ழ்ஞ்/ என்னும் இணையதளம் அல்லது 91500 60032 என்னும் கைப்பேசி எண்ணை தொடா்புகொண்டு ஜன. 7-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும்.
தமிழகத்தின் உற்பத்திப் பொருள்களை உலகச் சந்தைகளுக்கு எடுத்துச்செல்ல இந்த மாநாடு உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.