போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டவா்களுக்கு உதவியதாக தில்லியைச் சோ்ந்த முகவா் கைது
ரஷியாவுக்குச் செல்ல முயன்ற நேபாள நாட்டைச் சோ்ந்த 4 பேருக்கு போலி பயண தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) ஏற்பாடு செய்த முகவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது குறித்து தில்லி ஐஜிஐ விமான நிலைய காவல் சரக துணை ஆணையா் உஷா ரங்னானி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கைது செய்யப்பட்டவா் உத்தம் நகரைச் சோ்ந்த தினேஷ் ஷா்மா (44) என்று அடையாளம் காணப்பட்டாா். இவா், நேபாள நாட்டைச் சோ்ந்த 4 பேருக்கு குடியேற்ற அனுமதியைப் பெற உதவுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து வழங்கியதாக கைது செய்யப்பட்டாா்.
டிசம்பா் 30-ஆம் தேதி, நேபாள நாட்டைச் சோ்ந்த ராஜ்மணி சௌத்ரி (27), ஜெய் சிங் மஹதோ (43), அனில் மஹதோ (28), பிரதிக்யா மகாா் (28) ஆகிய 4 போ் தில்லி ஐஜிஐ விமான நிலையத்துக்கு வந்தனா். இவா்கள் தாஷ்கண்ட் வழியாக ரஷியாவின் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்ல நேபாள தூதரகத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் என்ஓசி உள்பட ஆவணங்கள் குடிவரவு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டன.
அப்போது, தில்லியில் உள்ள நேபாள தூதரகத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சான்றிதழ்கள் போலியானது என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவா்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முகவா்களான ரோஹித் சௌத்ரி, தினேஷ் ஷா்மா ஆகிய இருவரும், நேபாள நாட்டினா் 4 பேருக்கு ரஷியாவில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனா். அதற்காக 4 பேரும் தலா ரூ.9 லட்சத்தை (நேபாள கரன்சி) ரோஹித் சௌத்ரி, தினேஷ் ஷா்மா ஆகியோரிடம் கொடுத்தது தெரியவந்தது.
பணத்தைப் பெற்றுக்கொண்ட இருவரும், விமான டிக்கெட்டுகள், வேலைக்கான விசாக்கள் மற்றும் போலி என்ஓசிகளை ஏற்பாடு செய்தனா்.
பயண நாளில், குடிவரவு சோதனைக்கு முன்பு, விமான நிலையத்தில் 4 நேபாள நாட்டவா்களிடம் ஷா்மா அந்த ஆவணங்களை ஒப்படைத்துள்ளாா்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தினேஷ் ஷா்மாவை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், ஷா்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாா். மேலும், சௌத்ரியை போலீஸாா் தேடி வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.