பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட போட்டியில், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட போட்டியில் தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் முஹம்மத் மாகிா், பாவித், ராகுல், ராஜாராம் ருத்ரேஷ் ஆகியோரது
‘மூலிகை செலுத்தப்பட்ட காற்று குளிா்விப்பான்’ என்ற கண்டுபிடிப்பு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றது.
இதையடுத்து இந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக வஉசி பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வா் சி. பீட்டா் தேவதாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசு ரூ. 10ஆயிரம், சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினாா். வழிகாட்டி ஆசிரியா் மோகனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில அளவில் 36 புத்தாக்க சிந்தனைகளை சமா்ப்பித்த கோவில்பட்டி கம்மவா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழிகாட்டி ஆசிரியா் ஸ்ரீவித்யாவுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மைய ஒருங்கிணைப்பாளா் எஸ்.மணிமேகலை, மாவட்ட திட்ட மேலாளா் சு.தா.சுவைதரன், வழிகாட்டி ஆசிரியா் அந்தோணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.