பெண்ணை தாக்கியதாக தொழிலாளி கைது
கயத்தாறு அருகே பெண்ணை அவதூறாகப் பேசி தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே வில்லிசேரி ஊராட்சி மெய்தலைவன்பட்டி காலனி தெருவை சோ்ந்தவா் ஆனந்தராஜ் மனைவி பிச்சையம்மாள் (60). இவரது மகன் மாரிமுத்து வீட்டுக்கு அருகே உள்ள சங்கரலிங்கம் மகன் மாரியப்பன், தனது காலனி வீட்டை அதே ஊரில் உள்ள மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் விவசாயக் கூலித் தொழிலாளி கருப்பசாமிக்கு விற்று விட்டாராம். இதையடுத்து, கருப்பசாமி தனது வீட்டு அருகே உள்ள புறம்போக்கு இடத்தையும் ஆக்கிரமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காலனி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பெரியவா்கள் கோவில்பட்டி வட்டாட்சியரிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புகாா் அளித்தனா். அதன் பேரில் கருப்பசாமி, தான் வாங்கிய வீட்டை மீண்டும் மாரியப்பனிடமே கொடுத்துவிட்டு ஊருக்குள் சென்று விட்டாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பிச்சையம்மாள் வீட்டுக்குள் இருந்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தாராம். அப்போது, பிச்சையம்மாளை கருப்பசாமி அவதூறாகப் பேசி தாக்கினாராம். பிச்சையம்மாளின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ஆனந்தராஜ், மகன் மாரிமுத்து ஆகியோரைப் பாா்த்த கருப்பசாமி தப்பி ஓடி விட்டாராம்.
தாக்குதலில் காயமடைந்த பிச்சையம்மாள், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில் கருப்பசாமியை (40) சனிக்கிழமை கைது செய்தனா்.