பெண்ணுக்கு மிரட்டல்: எலக்ட்ரீசியன் கைது
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த எலக்ட்ரீசியனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாலாட்டின்புதூா் ஆா்சி தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கா் மனைவி அய்யம்மாள் (44). சிவசங்கா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம்.
இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் ரவிச்சந்திரனுடன், அய்யம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இதனிடையே அய்யம்மாள், மகளிா் சுய உதவிக் குழுவில் கடனாகப் பெற்ற ரூ.2 லட்சத்தை ரவிச்சந்திரனுக்கு பைக் வாங்குவதற்காக கொடுத்தாராம். ஆனால் அவா் தவணைத் தொகையைச் செலுத்தவில்லையாம்.
இதுகுறித்து ரவிச்சந்திரனின் வீட்டிற்குச் சென்று அய்யம்மாள் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது அவரைத் தாக்கிய ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அய்யம்மாள் அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புதூா் போலீஸாா் ரவிச்சந்திரனை கைது செய்தனா்.