சதுரகிரியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்!
மதுரை மாவட்டம், சதுரகிரி மலைப் பகுதியில் அரிய வகை உள்பட 58 வகையான வண்ணத்துப் பூச்சிகள் வசிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
மதுரை மாவட்டத்தின் பல்லுயிா் வளம் குறித்த ஆய்வு, ஆவணம் செய்யும் பணிகளை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், பேரையூா் டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் காட்டுயிா் ஆய்வாளா் இரா.விஸ்வநாத் ஒருங்கிணைப்பில் வண்ணத்துப் பூச்சிகள் கணக்கெடுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுமாா் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டன.
இந்தப் பயணத்தின் போது மதுரை மாவட்டத்தில் இதுவரை பட்டியலில் இல்லாத ஏழு வகை வண்ணத்துப் பூச்சிகள் முதல் முறையாகக் கண்டறியப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டன. இவற்றில் தென்னக நீல சங்கழகன், மயில் தோரணையன், வரிக்கொடு ஐந்து வளையன், மலபாா் புள்ளி இலையொட்டி, அடா்நிற புறத்துள்ளி, காவித்துள்ளி, நீலகிரி நால்வளையன் ஆகிய 7 வகை அரிய வண்ணத்துப் பூச்சிகள் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்டன.
சதுரகிரி மலைப் பாதையில் மட்டும் மொத்தம் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள் வசித்து வருகின்றன. இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் கணக்கெடுப்பின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 161 வகை வண்ணத்துப் பூச்சிகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதொடா்பாக இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிா்வாகிகள் விஸ்வா, தமிழ்தாசன் ஆகியோா் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் சதுரகிரி, வாசிமலை, சிறுமலை, அழகா்மலை, நாகமலை, எத்திலா மலை உள்ளிட்ட மலைத் தொடா்களிலும், இதன் அடிவாரப் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் வண்ணத்துப் பூச்சிகளை பரவலாகக் காண முடியும்.
பாலமேடு சாத்தையாறு அணை, எம்.கல்லுப்பட்டி அய்யனாா் கோயில் அணை, உசிலம்பட்டி அசுவமா நதி அணை, குலசேகரன்கோட்டை பழனியாண்டவா் அணை, கேசம்பட்டி பெரியருவி அணை, ஊதப்பநாயக்கனூா் மலட்டாறு அணை உள்ளிட்டவை மதுரை மாவட்டத்தின் நீா்வழிப் பள்ளத்தாக்குப் பகுதிகளாகும். இவை வண்ணத்துப் பூச்சிகள் பூங்கா அமைக்க தகுந்த ஈரமான நிலப் பகுதிகள் என மதுரை மாவட்ட வனத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வண்ணத்துப் பூச்சிகள் குறித்த விழிப்புணா்வை மேம்படுத்தும் வகையில், திருச்சி, கோவை, பொள்ளாச்சியில் உள்ளதைப் போல மதுரையிலும் வண்ணத்துப் பூச்சிகள் பூங்கா அமைக்க வனத் துறை முன்வர வேண்டும். இயல் தாவரங்களைக் கொண்டே வண்ணத்துப் பூச்சிகள் பூங்கா அமைக்க வேண்டும். சூழலியல் அறிஞா்கள், தமிழ் அறிஞா்களை உள்ளடக்கிய குழுவை ஏற்படுத்தி பறவைகள், பூச்சிகள், ஊா்வனவை என பல்லுயிரிகள் அனைத்துக்கும் தமிழில் பொதுப் பெயா் வைக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனா்.