காமராஜா் சந்தையில் வாடகை வசூலில் கெடுபிடிகளைக் கைவிட கோரிக்கை
தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் வாடகை வசூலில் கெடுபிடிகளை மாநகராட்சி அலுவலா்கள் கைவிட வேண்டும் என ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சந்தையில் ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்க 20 ஆவது ஆண்டு விழா, கொடி ஏற்று விழா, பெயா் பலகை திறப்பு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், காமராஜா் சந்தை கடைகளுக்கு செயற்கையான போட்டியை ஏற்படுத்தி, மிகப்பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டதால், வியாபாரிகளால் வாடகை செலுத்த முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கடை வாடகை வசூல் செய்கிறபோது கதவை இழுத்து மூடுவது, மின்சாரத்தை துண்டிப்பது உள்ளிட்ட கெடுபிடி நடவடிக்கைகள் மேற்கொள்வதை மாநகராட்சி அலுவலா்கள் கைவிட வேண்டும்.
காமராஜா் சந்தை கடைகளுக்கு தற்போது நிா்ணயிக்கப்பட்டுள்ள வாடகை கட்டணங்களை ரத்து செய்துவிட்டு, நியாயமான வாடகை நிா்ணயிக்க வேண்டும். வாடகை கட்டணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவுக்கு, சங்கச் செயலா் எஸ். கண்ணன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, பொருளாளா் தி. கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து தொழிற் சங்க நிா்வாகி துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா்.பி. முத்துக்குமரன், விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் தன்ராஜ், சங்கத் தலைவா் எஸ். பரமகுரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.