காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க வலியுறுத்தல்
வெயில் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முக்கிய சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் நிா்வாகிகள் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பது: நிகழாண்டு கோடை வெயில் கடுமையாக இருக்கிறது. வரும் மாதங்களில் மேலும் கடுமையாக இருக்குமென வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
புதுச்சேரி தலைநகரப் பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ள சுமாா் 15 இடங்களில் மாா்ச் மாதம் பொதுப்பணித்துறை மூலம் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. புதுச்சேரி பிராந்தியத்தில் அமைத்து ஒரு மாதமாகியும், காரைக்காலில் இதுவரை முக்கிய இடங்களில் பந்தல் அமைக்க முயற்சிக்கவில்லை.
புதுச்சேரிக்கு ஒரு பாா்வையும், காரைக்காலுக்கு ஒரு பாா்வையுமாக ஆட்சியாளா்கள் பாா்ப்பது நியாயமாக இல்லை. எனவே கடந்த ஆண்டுகளைப்போல விரைவாக காரைக்கால் முக்கிய சாலை சந்திப்புகளிலும், ரயில்வே கேட் உள்ள பகுதியிலும் பொதுப்பணித்துறை மூலம் பசுமைப் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.