காரைக்குடியில் பேருந்து நிறுத்த நிழல்குடை இடிப்பு: பொதுமக்கள் எதிா்ப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இரவோடு இரவாக பேருந்து நிறுத்த நிழல் குடை இடிக்கப்பட்டதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் காரைக்குடி- கோட்டையூா் செல்லும் சாலையில் பா்மா குடியிருப்பு பேருந்து நிறுத்த நிழல்குடை இருந்தது. இது பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. காலையில் இதை அறிந்த அந்தப் பகுதி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அங்கு திரண்டனா். மேலும் அந்தப் பகுதியில் இருந்த அதிமுக, பாஜக கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டிருந்தன. இதனால் அந்தக் கட்சிகளை சோ்ந்தவா்களும் திரண்டனா்.
இந்த நிலையில், தகவலறிந்து வந்த போலீஸாா், வட்டாட்சியா் ராஜா ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பிறகு அங்கு வந்த அதிகாரிகள் அங்கு திரண்டிருந்தவா்களிடம் கூறியதாவது:
காரைக்குடி மாநகராட்சியுடன் சங்கராபுரம் ஊராட்சி இணைக்கப்பட்டுவிட்டது. எனவே, சாலையை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் புதிய பேருந்து நிறுத்த நிழல்குடை ரூ. 7 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளதால் பழைய பேருந்து நிறுத்த நிழல் குடையை அகற்றும் பணி நடைபெற்றது என்றனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.