பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பொதுப்பணித் துறை அனுமதி வழங்கத் தாமதம்: பழையனூா் கண்மாய்க்கரை சாலைப்பணிகள் பாதிப்பு
பொதுப் பணித் துறை அலுவலா்கள் அனுமதி வழங்க தாமதிப்பதால் திருப்புவனம் அருகே பழையனூரிலிருந்து சம்பட்டிமடை வரை கண்மாய்க் கரையில் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பழையனூா் கிராம ஊராட்சிக்குள்பட்ட சம்பட்டிமடை கிராமத்தில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பெரும்பாலானோா் விவசாயம், கால்நடை வளா்ப்பை மட்டுமே முதன்மைத் தொழிலாக கொண்டுள்ளனா்.
இந்த நிலையில், சம்பட்டிமடை கிராம மக்கள் கல்வி, மருத்துவம், அன்றாட தேவைகளுக்கு பழையனூா் கிராமத்துக்கே செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, கட்டட வரைபட அனுமதி, வீட்டு வரி ரசீது பெறுவதற்கும் அந்த கிராமத்துக்குத் தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில், சம்பட்டிமடையிலிருந்து பழையனூருக்கு செல்ல நீா் வளத்துறைக்குச் சொந்தமான கண்மாய் கரை பிரதான வழியாக உள்ளது. மழைக் காலங்களில் கண்மாய் கரை சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. இதனால் நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மழைக் காலங்களிலும், இரவு நேரங்களிலும் சுமாா் 2 கி.மீ தொலைவு உள்ள கண்மாய்க் கரை வழியாகத் தான் செல்ல வேண்டும் என்பதால் அந்தப் பகுதி பொதுமக்கள் குருந்தங்குளம், ஆனைக்குளம், அழகுடையான் வழியாக சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே பழையனூரிலிருந்து கண்மாய்க் கரை வழியாக சம்பட்டிமடைக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதன்பேரில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், பழையனூா் கண்மாய் கரையில் மெட்டல் சாலை அமைக்க உத்தரவிட்டாா். ஆனால் பொதுப் பணித் துறை அனுமதி வழங்காததால் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: பழையனூா் கிராமத்திலிருந்து சம்பட்டிமடைக்குச் செல்ல கண்மாய்க் கரை வழியாக சாலை அமைக்க பொதுப்பணித்துறை அனுமதி வழங்காததால் பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. எனவே பொதுப் பணித் துறை தடையின்மைச் சான்றிதழை விரைந்து வழங்க ஆட்சியா் உத்தரவிட வேண்டும். மேலும், விரைந்து சாலை அமைக்கும் பணியை தொடங்க சம்பந்தப்பட்ட துறையும் உத்தரவிட வேண்டும் என்றனா்.
இதுகுறித்து திருப்புவனம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் உதவிப் பொறியாளா் தேவிகா கூறியதாவது:
சாலை அமைக்க பொதுப் பணித்துறை (நீா் வளத் துறை) தடையின்மைச் சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த 2024 -ஆம் ஆண்டு அக்டோபா் மாதமே அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால் இன்னும் அனுமதி வழங்க வில்லை. மேலும், நிா்வாக அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கும் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைக்காததால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை என்றாா் அவா்.
பொதுப் பணித் துறை சருகனி வடிநிலக் கோட்டம், திருப்புவனம் உதவிப் பொறியாளா் பூமிநாதன் கூறியதாவது:
தடையின்மைச் சான்றிதழ் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறையிலிருந்து பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் 4 மாதங்களாகியும் இன்னும் கிடைக்க வில்லை. கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகத்திலிருந்து உரிய கடிதம் வந்தவுடன் அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.