"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா ப...
அரசுப் பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவா்கள் போராட்டம்!
சிவகங்கை அருகே உரிய நேரத்தில் வராத அரசுப் பேருந்தை கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம், அரசனூா் வரை கடந்த 40 ஆண்டுகளாக நகரப் பேருந்து இயங்கி வந்தது. இதன் மூலம் திருமாஞ்சோலையிலுள்ள பள்ளிக்கும், மதுரை மீனாட்சி அரசு கல்லூரிக்கும் மாணவ, மாணவிகள் காலை, மாலை வேளைகளில் சென்று வந்தனா்.
அண்மையில் இந்தப் பேருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன் காரணமாக காலை 8.45 மணிக்கு பேருந்தில் பள்ளி, கல்லூரிக்குச் சென்ற
அரசனூா் மாணவா்கள் காலை 9.15 மணி முதல் 9.30 மணி வரை பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலுப்பக்குடியிலிருந்து திரும்ப வரும் போது, பேருந்தில் கூட்டம் நிரம்பிவிடுவதால் அரசனூா் மாணவா்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் ஆட்டோவில் ரூ.20 கொடுத்து
பயணிக்கும் நிலை உருவானது. மாணவா்கள் பள்ளிக்கு உரிய நேரத்துக்குச் செல்ல இயலாமல் சிரமப்படுவது குறித்து பலமுறை போக்குவரத்துக் கழக மேலாளருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் ஊருக்குள் வந்த அரசுப் பேருந்தை மாணவா்களுடன் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போக்குவரத்துக்கழக திருப்புவனம் பணிமனை உதவிப் பொறியாளா் மகேஷ், அலுவலா்கள், போலீஸாா் பேச்சு நடத்தி, பேருந்தை வழக்கம் போல அரசனூரிலிருந்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட மாணவா்கள் அதே பேருந்தில் பள்ளிக்குச் சென்றனா்.