கார் கம்பெனிகளின் எலெக்ட்ரிக் படையெடுப்பு!
மின்சாரக் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான சாய்ஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது டாடா ஹேரியர்.ev. டாடாவின் மின்சாரக் கார்கள் மீது இருந்த ஊடக வெளிச்சத்தையும் வாடிக்கையாளர்களின் கவனத்தையும் மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e ஆகிய கார்கள் தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டன. இன்னொரு பக்கம் அதிக சந்தடியில்லாமல் எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் காமெட், மற்றும் ZS ev ஆகியவற்றோடு வின்ட்சர் ev-யையும் களம் இறக்கி விற்பனையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு மஹிந்திரா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் ஆகியவை எடுக்கும் முன்னெடுப்புகள் முற்றிலும் தகுதி படைத்ததுதான் என்றாலும், தான் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு களத்தை டாடா அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துவிடுமா என்ன?
நெக்ஸான்.ev, டியாகோ.ev, பஞ்ச்.ev, கர்வ்.ev என்று ஏற்கெனவே களத்தில் இருக்கும் டாடா, இப்போது ஐந்தாவதாக ஹேரியர்.ev-யையும் களம் இறக்கியிருக்கிறது. ஹேரியரின் டீசல் இன்ஜினை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக பேட்டரியையும் மோட்டாரையும் மாட்டி உருவாக்கப்பட்டது அல்ல ஹேரியர்.ev.
Acti.ev Plus இயங்குதளத்தில் புத்தம் புதியாப் பிறந்திருக்கிறது ஹேரியர்.இவி. ``பிராண்ட் வேல்யூவைக் கருத்தில் கொண்டு மட்டுமே ஹேரியர் என்கிற பெயரை ஹேரியர்.evக்குப் பயன்படுத்தியிருக்கிறோம். மற்றபடி புதிய ப்ளாட்ஃபார்ம், புதிய சஸ்பென்ஷன், புதிய டிஜிட்டல் கட்டமைப்பு என ஆரம்பப் புள்ளியில் இருந்து அனைத்துமே இதில் புதிதுதான்!” என்கிறது டாடா.
டாடா சொல்வது உண்மைதான். லேண்ட்ரோவரின் D8 இயங்குதளத்தில் உள்ள Omega Arc-ல்கூட ஹேரியரை உருவாக்கியிருக்கலாம். ஆனால் Acti.ev ப்ளாட்ஃபார்ம் ரொம்ப ஸ்பெஷல். frequency-dependent damping சஸ்பென்ஷனும்தான்.
இன்னொருபுறம் VF 7. இந்த மாடல் மட்டுமில்லை; கம்பெனியே புதிது. வியட்நாமிலிருந்து தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைத்திருக்கும் வின்ஃபாஸ்ட் அறிமுகம் செய்யப்போகும் VF 7 வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய ஒரு சாய்ஸைக் கொடுக்க இருக்கிறது.
இந்தக் களத்தில் `நானும் இருக்கிறேன்’ என்று ஹூண்டாய் க்ரெட்டா.ev கொடுக்கும் குரல் ஒரு புறம் கேட்க... இன்னொரு திசையில் இருந்து `நானும் வருகிறேன்’ என்று மாருதி சுஸூகியின் e.விட்டாராவின் குரலும் கேட்கிறது.
இந்தப் போட்டியில் யார் யார் குரல் எடுபடப் போகிறது என்பதை வாடிக்கையாளர்கள் முடிவு செய்வார்கள்.