'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' - எம்.பி சு.வெங்கட...
`இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 5 கோடி வரை கடன்!' ஐ.ஓ.பி வங்கியின் தலைவர் தகவல்!
இயற்கை விவசாயம் வேகமாக பரவி வருகிறது. அதை முன்னெடுக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இன்ஃபினிட் சேவா, ரிச் பிளஸ் மற்றும் அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர் ஆகிய அமைப்புகள் இணைந்து 'இயற்கை விவசாயத்தை தீவிரமாக செயல்படுத்த விவசாயிகளுக்கு திறனதிகாரம் அளிப்பது' என்ற தலைப்பில் மதுரையில் மாநாட்டை நடத்தின.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை பிரதானமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (FPO) தலைவர்கள் மற்றும் விவசாயிகள் என 600-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இன்ஃபினிட் சேவா சங்கத்தின் நிர்வாக இயக்குனர் மணிமாறன் வரவேற்புரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து இன்ஃபினிட் சேவா அமைப்பின் தலைவர் நளினி பத்மநாபன் பேசினார். அவர் பேசியபோது, "உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாயத்தின் தூண்களாக இருந்து வருகின்றன. இயற்கை விவசாயத்தை ஏற்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். அந்த முயற்சியில் ஒரு பங்காக இந்த மாநாடு இருக்கும் என்று நம்புகிறேன். இந்த முயற்சியானது ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ரிச் ப்ளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன் பேசியபோது, "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற வரிகளுக்கு ஏற்ப நம் நாட்டில் இல்லாத வளங்களே இல்லை. அத்தகைய வளம் மிக்க இந்த நாட்டை உயர்த்தி காட்டும் சக்தி விவசாயம் மட்டுமே. 30 வருடங்களுக்கு முன்பு இருந்த மண்ணின் வளம் தற்போது இல்லை. மண்ணின் வளம் 50% குறைந்துள்ளது. இன்னும் ஐந்து வருடங்களில் மண் முற்றிலும் மலடாகிவிடும். இதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைதான் 'நன்னெறி வேளாண்மை' (Organic farming).

நன்னெறி வேளாண்மையில் உபயோகிக்கப்படும் அங்கக உரங்கள் (organic manures) மூலம் மண்ணின் உயிர்த்தன்மை அதிகரிக்கும். உயிர் உரங்களின்( biofertilizers) மூலம் மண்ணில் ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும். இரண்டும் சேர்ந்து வேளாண்மையில் நிலைத்த வருமானம் கொடுக்க கூடியதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இதோடு நம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையிலும் இருக்கும். எனவே, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் அழிவின் விளிம்பிலிருந்து மண்ணை மீட்பதும் நாம் ஒவ்வொருவரின் கடமை" என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், "எதிர்கால இந்திய விவசாயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முழுமையாக உணர்ந்து, அதனை பேணிப் பாதுகாக்கும் நடைமுறைகளில்தான் அடங்கியுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எஃப்.பி.ஓ(FPO) நிதி உதவி திட்டத்தின் மூலம் ரூ.10 கோடி வரை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படும். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட ஹரித் கிராந்தி திட்டத்தின் மூலம் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் தனிநபருக்கு 5 கோடி முதல் கடன் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் ஆர். ஆனந்த் பேசுகையில், "ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் என்ற காலம் மாறி இன்று ஒரு நாளைக்கு 20 ஆப்பிள்கள் சாப்பிட்டால்தான் அதற்கு இணையான சத்துக்கள் கிடைக்கும் என்ற நிலைமை ஆகிவிட்டது. அந்த அளவிற்கு விவசாயம் நச்சுமிக்கதாக மாறிவிட்டது. இதை மாற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது மட்டுமே தீர்வு. இதுவே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இயற்கை விவசாயத்திற்கு மாறும்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்பீடுகளை சரிசெய்யும் வகையிலான திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்" என்று கூறினார்.
அமுல் டைரி இந்தியா நிறுவனத்தின் தலைவர் கோபால் சுக்லா சிறப்புரை ஆற்றியபோது, "விவசாயிகளின் நலனுக்காக அமுல் நிறுவனம் நீண்ட காலமாக அர்ப்பணிப்பையும், சிறப்பான முயற்சிகளையும் செய்து வருகிறது. மேலும் வலுவான கொள்முதல் அமைப்புகள் மற்றும் நியாயமான விலை வழிமுறைகள் மூலம் இயற்கை விவசாய நடைமுறைகளுக்கு அமுல் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மாநாட்டின் முடிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பல்வேறு விவசாய திட்டங்களின் கீழ் 119 விவசாயிகளுக்கு ரூ.24.02 கோடி மதிப்பிலான கடன் ஒப்புதல்களை வழங்கியது. இதன்மூலம் கோடை ஹில்ஸ் கிராப்ஸ் ப்ரொடியூசர் கம்பெனிக்கு இரண்டு கோடியும், விவசாயிகள் சரஸ்வதி ஆரோக்கியசாமி மற்றும் கிருபா ஆகியோர்கள் ஒரு கோடி மதிப்பிலான கடன் ஒப்புதல்களையும் பெற்றுக் கொண்டனர்.
மதுரை ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி நித்யபனந்தா, இன்பினிட் சேவா மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.