'திருநங்கைங்கிறதால வேலையில்லைன்னு வெளியில அனுப்பினாங்க' - திருநங்கை Dr.Siva Umai...
திருவள்ளூர்: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - உயிரைப் பறித்த ஒரு சவரன் நகை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து நான்கு நாட்களே ஆன நிலையில் லோகேஸ்வரியிடம் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அதனால் லோகேஸ்வரி, மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில்தான் கடந்த 30-ம் தேதி கழிவறையில் லோகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், லோகேஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

`மாப்பிள்ளை வீட்டினர் கொடுமைப்படுத்திருக்கிறார்கள்’
இந்தச் சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல் நிலையத்தில் லோகேஸ்வரின் குடும்பத்தினர் புகாரளித்தனர். அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக லோகேஸ்வரியின் குடும்பத்தினர் கூறுகையில், ``திருமணத்தின்போது 10 சவரன் தங்க நகைகளை மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணையாக கேட்டனர். அதற்கு 5 சவரன் தங்க நகைகளை மட்டுமே கொடுக்க முடியும் என நாங்கள் தெரிவித்தோம். இதையடுத்து திருமணத்துக்கு மாப்பிள்ளை குடும்பத்தினர் சம்மதித்தனர். ஆனால் எங்களால் 4 சவரன் தங்க நகைகளை மட்டுமே லோகேஸ்வரிக்கு கொடுக்க முடிந்தது. ஒரு சவரன் தங்க நகையை கேட்டு லோகேஸ்வரியை மாப்பிள்ளை வீட்டினர் கொடுமைப்படுத்திருக்கிறார்கள்.
திருமணம் முடிந்து மறுவீட்டுக்காக தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி இந்த கொடூரங்களை எங்களிடம் தெரிவித்து கதறி அழுதார். அதோடு திருமணத்துக்குப்பிறகு லோகேஸ்வரியை கொத்தடிமை போல வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்ய கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் வீட்டில் உள்ள சோபாவில அமர கூடாது எனவும் கூறியிருக்கிறார்கள். அதனால் மனமுடைந்த லோகேஸ்வரி, வீட்டின் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கழிவறையில் கதவு திறக்கப்படாததால் சந்தேகப்பட்டு கழிவறையின் கதவை உடைத்தபோதுதான் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரியவந்திருக்கிறது. எனவே லோகேஸ்வரியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீஸாரிடம் கேட்டபோது, ``திருமணமான 4-வது நாளில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் லோகேஸ்வரி தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறோம். அந்த ரிப்போர்ட் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.