அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்
திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு 5 போலீஸார் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரனை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். மறுபக்கம், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்த அறிவிப்பில் ஸ்டாலின், "காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் இளைஞரின் மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தேன்.
இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.
காவல்துறையைச் சேர்ந்த ஐவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன்.

சி.பி.ஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும். திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது.
இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆரில், நகையைத் திருடியதை அஜித்குமார் ஒப்புக்கொண்டதாகவும், போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஜித்குமார் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.