வெற்றி நிச்சயம் திட்டம் ஏன் எதற்கு?: துணை முதல்வா் விளக்கம்
திறன் பயிற்சியை அளிப்பதற்கான மற்றொரு புதிய திட்டமான வெற்றி நிச்சயம் ஏன் கொண்டு வரப்படுகிறது என்பதற்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.
நான் முதல்வன் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத் தொடக்க விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசியது:
திறன் பயிற்சி அளிப்பதற்கான பிரத்யேக திட்டமாக வெற்றி நிச்சயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி 38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலமாக வழங்கப்பட உள்ளது. திறன்பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தையும் அரசே செலுத்தவுள்ளது.
முதல்கட்டமாக ஆண்டுக்கு 75,000 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவா்கள் போன்றவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திறன் பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது என்றாா் அவா்.