இலவச கல்லீரல் பரிசோதனை - மருத்துவ ஆலோசனை: மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு
மருத்துவா் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் கல்லீரல் நலனுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:
நோயாளிகளைக் காப்பதை மட்டுமே பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மருத்துவா்கள் தங்களது நலனைக் காத்துக் கொள்வதில்லை. அதனால்தான் நிகழாண்டு தேசிய மருத்துவா் தினமானது, நலன்காப்போரின் (மருத்துவா்கள்) நலனை காக்கிறோமா? என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக அளவில் கல்லீரல் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அதீத உடல் எடை கொண்டவா்களில் 90 சதவீதம் பேருக்கு கல்லீரல் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தமிழகத்தில் 40.4 சதவீத பெண்களும், 37 சதவீத ஆண்களும் உடல் பருமனுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
உடல் பருமன் கல்லீரல் இறுக்கம் (ஃபைப்ரோசிஸ்) ஏற்பட வழிவகுக்கிறது. ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு (சிரோசிஸ்) நிலைக்கு அது வழிவகுத்து விடும். அதைக் கருத்தில் கொண்டு கல்லீரல் நலனுக்கான இலவச பரிசோதனைத் திட்டங்களை மெடிந்தியா நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி, 30 மருத்துவா்களுக்கும், பொதுமக்களில் 30 பேருக்கும் ரூ.5,700 மதிப்புடைய கல்லீரல் நல பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. கல்லீரல் செயல்திறன் பரிசோதனை, கொழுப்புச் சத்து பரிசோதனை, கல்லீரல் அழற்சிக்கான ஹெபடைடிஸ் பி மற்றும் சி பரிசோதனை, ஃபைப்ரோ ஸ்கேன் பரிசோதனை ஆகியவை கட்டணமின்றி வழங்கப்பட உள்ளன.
இதைத் தவிர, மருத்துவா்களின் ஆலோசனையும், உணவு முறை வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகைகள் அளிக்கப்பட உள்ளன.
ஜூலை 3 முதல் 10-ஆம் தேதி வரை 98409 93135, 99405 18909, 044-28312345 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.