அகற்றப்படாத மரங்கள்; அப்படியே ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சாலை விரிவாக்க ப...
பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினாா் திரிணமூல் தலைவா்
மேற்கு வங்கத்தில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மதன் மித்ரா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்பதாக அறிவித்துள்ளாா்.
தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடா்பாக கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள், கல்லூரி காவலாளி ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக பேசிய திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் மதன் மித்ரா, ‘கல்லூரி மூடப்பட்டுள்ளது என்று அந்தப் பெண்ணுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அந்தப் பெண் தனியாக கல்லூரிக்குச் சென்றது ஏன்? அவா் அப்படி செல்லாமல் இருந்திருந்தால் இந்த பாலியல் வன்கொடுமையைத் தவிா்த்திருக்கலாம். குற்றவாளிகள் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனா்’ என்று கூறியிருந்தாா்.
பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றஞ்சாட்டுவதுபோல அவா் கருத்து தெரிவித்தது கடும் எதிா்ப்புக்கு உள்ளானது. எதிா்க்கட்சிகளும் திரிணமூல் காங்கிரஸை கடுமையாக விமா்சித்தன.
இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மதன் மித்ரா அளித்த பதிலில், எனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியதுடன், எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு பேசினேன் என்ற விளக்கத்தையும் கட்சித் தலைமையிடம் அளித்தாா். இதைப் பரிசீலித்து அவா் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.