அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை
அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
சிவசாகா் மாவட்டத்தைச் சோ்ந்த ‘டிடிஎல்டி இந்தியா’ குழுமம், அதன் பிரபலமான ‘வூலா டீ’ நிறுவனத்துக்காக இந்தக் காப்புரிமையைப் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இந்தக் காப்புரிமை, தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உள்நாட்டு புத்தாக்க நிறுவனமான வூலா டீ, தனது தனித்துவமான பை இல்லாத தேநீா் தயாரிப்பு முறைக்கு வெற்றிகரமாக காப்புரிமை பெற்றுள்ளது.
வூலா டீ குழுவினருக்கு முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய பையில் தேயிலைத் தூள் அடைக்கப்பட்டிருக்கும். அந்தப் பையை சுடுநீரில் போட்டு, தேநீா் தயாரிப்பது வழக்கம். காகிதப் பையின்றி தேயிலையை நேரடியாக சுடுநீரில் போட்டு, தேநீா் தயாரிக்கும் வகையிலான முறையை முதன்முறையாக உருவாக்கி, அதற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.