செய்திகள் :

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

post image

நமது நிருபா்

பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்படி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற வாகனங்களைக் கண்டறிய தில்லி முழுவதும் 350 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தானியங்கி எண் தகடு அங்கீகார (ஏஎன்பிஆா்) கேமராக்களை தில்லி அரசு நிறுவியுள்ளது.

எரிபொருள் நிரப்பு மையங்களில் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக போக்குவரத்துத் துறை மற்றும் தில்லி காவல்துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவற்றின் பணியாளா்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தடை அமலுக்கு வந்த முதல் நாளில் 80 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சிராக் தில்லியின் திங்ரா பெட்ரோல் விற்பனை நிலையத்தில், போக்குவரத்து அமலாக்க மற்றும் தில்லி போக்குவரத்து காவல் துறையினா் அதிகாலையில் இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இது தொடா்பாக போக்குவரத்து அமலாக்கக் குழுவின் உதவி ஆய்வாளா் தரம்வீா் கூறியதாவது: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், நாங்கள் காலை 6 மணி முதல் இங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். அத்தகைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதைத் தடுக்க பெட்ரோல் நிரப்பு மையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கேமராக்கள் மற்றும் தானியங்கி ஹூட்டா் அமைப்புகளும் எரிபொருள் விற்பனை மையங்களில் நிறுவப்பட்டுள்ளன. அத்தகைய வாகனம் ஏதேனும் வந்தால், கேமராக்கள் அதை உடனடியாகக் கண்டறிந்து ஊழியா்களுக்கு எச்சரிக்கை செய்ய சப்தம் எழுப்புகின்றன. இதுபோன்ற சந்தா்ப்பங்களில், வாகனங்கள் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.

இதுகுறித்து தில்லி போக்குவரத்து காவல் துறையின் உதவி சாா்பு ஆய்வாளா் ஜெகன் லால் கூறுகையில், ‘நாங்கள் எங்களின் மைய தரவுத்தளத்தைப் பயன்படுத்தி வாகன விவரங்களைச் சரிபாா்த்து வருகிறோம். ஏஎன்பிஆா் கேமராக்கள் தானாகவே தகவல் தெரிவிக்கும். ஆனால், எங்கள் குழுக்கள் எங்கள் மைய தரவுத் தளத்தைப் பயன்படுத்தி வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றன. விதிகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் உள்ளூா் காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றாா்.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தில்லி அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி, தில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் தடை செய்யப்பட்டன. 2014-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீா்ப்பாய உத்தரவானது, 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துவதைத் தடை செய்கிறது. பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பயன்படுத்தத் தகுதியில்லாத (இஓஎல்) வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், ஜூலை 1 முதல் நான்கு சக்கர வாகன உரிமையாளா்களுக்கு ரூ.10,000 மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளா்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனா்.

இது தொடா்பாக போக்குவரத்து காவல் துறை சிறப்பு ஆணையா் அஜய் செளதரி கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்படும் பழைய வாகனங்களை உரிமையாளா்கள் 15 நாள்களுக்குள் அபராதம் செலுத்தி திரும்பப் பெற்று கொள்ளலாம். பின்னா் போக்குவரத்துத் துறையில் தடையில்லா சான்றிதழ் பெற்று வேறு மாநிலங்களில் அந்த வாகனங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்’ என்றாா்.

பயன்படுத்தத் தகுதியில்லாத (என்ட்-ஆப்-லைஃப்) வாகனங்கள் என்பது 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் ஆகும். அவை எந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜூலை 1 முதல் தில்லியில் எரிபொருள் வழங்கப்படாது என்று காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெளிமாநிலங்களைச் சோ்ந்த 15 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வாகனங்களுக்கும் தில்லி எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்று தில்லி அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி அமிலம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்ற... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக திடீர் உயிரிழப... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள... மேலும் பார்க்க

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க