தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா
மருத்துவமனையில் மாணவி நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் - மத்திய பிரதேச கொடூரம்
மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள நர்சிங்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் என்ற வாலிபர் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியில் சந்தியா என்ற 12வது வகுப்பு படிக்கும் மாணவியை டாக்டர்கள் மற்றும் பாதுகாவலர்கள் முன்னிலையில் அடித்தார். அதோடு அப்பெண்ணை அடித்து கீழே தள்ளிய அபிஷேக், அப்பெண்ணின் நெஞ்சில் அமர்ந்து கொண்டு தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்தை அறுத்தார்.
அருகில் நின்ற யாரும் அப்பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை. அந்த வாலிபர் 10 நிமிடம் அப்படியே அமர்ந்து கொடூரமாக கழுத்தை அறுத்து அப்பெண்ணை கொலை செய்தார்.

அப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் பின்னர் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்று அதில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் தப்பிச்சென்றார். அப்படி வெளியில் தப்பிச்சென்ற போது கூட யாரும் அவரை பிடிக்க முயற்சி செய்யவில்லை. மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அபிஷேக் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
கொலை நடந்த இடத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், பாதுகாவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மாணவியை காப்பாற்ற எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. இச்சம்பவத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதோடு கொலை நடந்த அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அனைவரும் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்து கொண்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில்,''சந்தியா வீட்டில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு சென்றார். அவரது வருகைக்காக அபிஷேக் மருத்துவமனைக்கு வெளியில் காத்திருந்தார். அம்மாணவி வந்தவுடன் அவருடன் சிறிது நேரம் அபிஷேக் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இரண்டு பேரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என சொல்லப்படுகிறது" என்றார். தகவல் அறிந்து மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தபோது சம்பவம் நடந்த இடத்தில் மாணவியின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடந்தது. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்குத்தான் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.