கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசா...
திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன்
திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவரை இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக அஜித்குமார் சனிக்கிழமை அன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம், அஜித்குமாரின் மரணத்துக்குப் பிறகான எஃப்.ஐ.ஆரில், நகையைத் திருடியதை அஜித்குமார் ஒப்புக்கொண்டதாகவும், போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஜித்குமார் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ஆனால், உடற்கூராய்வில் அஜித்குமார் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மறுபக்கம், இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும், மானாமதுரை டி.எஸ்.பி சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறான சூழலில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இவ்வழக்கின்மீது விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் காவல்துறையைக் கடிந்துகொண்ட நீதிபதிகள், இந்தக் கொலை வழக்கை உணர்வுபூர்வமாக எடுத்துக்கொண்டு, சிபிசிஐடி சிறப்பு குழு நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், "மானாமதுரை டி.எஸ்.பி-யின் கீழ் செயல்படுகின்ற தலைமை கான்ஸ்டபிள் வழிநடத்துகிற ஒரு தனிப்படையிடம் எஃப்.ஐ.ஆருக்கு முன்பாகவே விசாரணை ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள், அஜித்குமார், அவரின் தம்பி நவீன், அருண் மற்றும் இருவரை 27-ம் தேதி இரவு முதல், 28-ம் தேதி காலை வரை திருப்புவனத்தை சுற்றியுள்ள 4 பகுதிகளுக்குக் கூட்டிச்சென்று மிகக் கொடூரமான சித்ரவதைகளைச் செய்தார்கள்.
இறுதியாக மடப்புரம் கோயில் பின்பக்கத்தில் இருக்கின்ற ஒரு மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை கூட்டிச் சென்று, ஒளித்து வைத்திருக்கின்ற நகை எங்கே என்று கேட்டு, அது கிடைக்கவில்லை என்றவுடன் அவருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கண்களிலும் வாயிலும் மிளகாய்ப்பொடி தூவினார்கள்.

அதை கோயிலில் இருக்கின்ற பாத்ரூமில் இருந்து நேரடியாகப் பார்த்து வீடியோ எடுத்தது கோயிலில் வேலைசெய்யக்கூடிய சதீஷ்வரன்.
அதை அவர் வழக்கறிஞர்களிடம் கொடுத்து, இன்று நீதிமன்றத்தில் கொடுத்ததில் அங்கே நடந்ததை நீதிபதிகள் பார்க்க முடிந்தது. காவல் நிலையத்தில் இருக்கின்ற சிசிடிவி காட்சிகளைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று அரசு தரப்பில் கூறினார்கள்.
ஆனால், கோயிலில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை அழிக்கும் நோக்கில் 29-ம் தேதி காலையில் ராமச்சந்திரன் என்கின்ற உதவி ஆய்வாளர் அங்கே வந்து காட்சிகளைப் பறித்துச் சென்றார் என்று கூறப்பட்டது.
அதன்பிறகு, உடற்கூராய்வு அறிக்கையை டீன் கொடுக்கவில்லை என்று புகாரின் காரணத்தினால், அவரை வரவழைத்து அவரிடமிருந்து சீல் வைக்கப்பட்ட கவரில் வாங்கப்பட்ட உடற்கூராய்வு முதல்நிலை அறிக்கையில் 44 கொடூர காயங்கள் இருப்பதைக் குறிப்பிட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.
ஒரு கொலையில் கூட இவ்வளவு காயங்கள் இருக்காது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
அதையடுத்து இது நடக்கக் கூடாத சித்ரவதை, வன்முறை என்று அரசு ஏற்றுக்கொள்கிறது என அரசு தரப்பு கூறியது.
இறுதியாக மதுரை நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நீதிபதிகள் நியமனம் செய்து, அவரிடம் அனைத்து சாட்சியங்களையும் இரண்டு மூன்று நாட்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை அவர் ஆய்வு செய்து ஜூலை 8-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள்.
மேலும், அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணை தொடரும் என்றும் அதே தேதிக்கு முன்பாக விசாரணை நிலை அறிக்கையைக் கொடுப்போம் என்றும் அரசு தரப்பு கூற, அரசு இன்னும் மேல் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்" என்று கூறினார்.