தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்
கட்டண உயர்வுக்குப் பிறகு அறிமுகமான ரயில் ஒன் செயலி! சிறப்புகள் என்னென்ன?
அனைத்து வகையான ரயில் பயண சேவைகளையும் வழங்கும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை மத்திய அரசு இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, உணவு ஆர்டர் செய்ய, கருத்துகளைப் பதிவு செய்ய என ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ரயில் ஒன் என்ற செயலியில் அனைத்து சேவைகளையும் ரயில்வே வழங்கியுள்ளது.
ரயில்வே தகவல் அமைப்பு மையத்தின் 40வது நிறுவன தினத்தையொட்டி ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்து வைத்தார்.
மெயில் மற்றும் விரைவு ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ரயில் ஒன் என்ற செயலியையும், பயணிகளின் பயன்பாட்டிற்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட்போன் பயனர்கள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் மூலம் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து தரவுகளை உள்ளீடு செய்து பயன்படுத்தலாம்.
செயலியின் சிறப்புகள்
ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், உணவு ஆர்டர் செய்வதற்கு ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் , கருத்துக்களை பதிவு செய்ய ரயில் மடாட், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற யூடிஎஸ் என ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ரயில் ஒன் உள்ளது.
ரயில் பயணத்தின்போது உணவினை ஆன்லைனில் முன்பதிவு செய்தல், ரயில் நிலையங்களில் பொருள்களை எடுத்துச் செல்லும் தொழிலாளர்களை முன்பதிவு செய்தல், வாடகை கார்கள் என அனைத்து விதமான வசதிகளையும் ரயில் ஒன் செயலியில் செய்துகொள்ளலாம்.
முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகள் 3 சதவீத தள்ளுபடியுடன் பெறுவது, ரயில் எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை கண்காணிக்கும் வசதி, பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் சேவை உள்ளிட்டவை இந்த செயலியில் உள்ளன.
இருந்தாலும், ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயலி, நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவுகளை செய்யும் என்றும், 40 லட்சம் விசாரணைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது எனவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ரயில் கட்டண உயா்வு இன்று முதல் அமல்
RailOne App launched : One-stop solution for all passenger services