கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசா...
`குண்டு வச்சிருக்கோம்..’ - தென்காசி முகவரியில் இருந்து வேலூர் ஆட்சியருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இருக்கிறது. அருகிலேயே எஸ்.பி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், `பெறுநர் - ஆட்சியர்’ எனக் குறிப்பிட்டு, `விடுநர் - அண்ணாதுரை, தென்காசி’ என்கிற முகவரியில், அவரின் செல்நெம்பரையும் குறிப்பிட்டு ஒரு கடிதம் ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தது. அதில், மிரட்டும் தொனியில் ஆட்சியர் அலுவலகத்தில் `வெடிகுண்டு வச்சிருக்கோம்..’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, எஸ்.பி அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி மதிவாணன் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் `அக்னி’யை அழைத்துக்கொண்டு 6 பேர்க்கொண்ட வெடிகுண்டு நிபுணர் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைந்துசென்றனர். ஆட்சியரின் அறை உட்பட இரண்டாவது தளம், தரைத்தளம் என கட்டடத்தை முழுவதுமாக சோதனை செய்தனர்.

அதில், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருளும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு மோப்ப நாய் அக்னியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்நெம்பரை தொடர்புகொண்டு போலீஸார் விசாரித்தபோது, எதிர் முனையில் பேசிய அந்த நபர் `சார்... எனக்கும் அந்த கடிதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ எனக்கு ஆகாத ஆளுங்க என்னை சிக்க வைக்கிறதுக்காக என்னோட பெயரையும், செல்நெம்பரையும் போட்டு இப்படி கலெக்டர் ஆபீஸுக்கு அனுப்புறாங்க. ஏற்கெனவே, ரெண்டு மூணு முறை வேறு கலெக்டர் ஆபீஸுக்கும் இப்படித்தான் அனுப்பியிருக்கிறாங்க...’ என்று கதறினார். `அட பாவமே..’ என்று வருத்தப்பட்ட காவல்துறையினர் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அனுப்பியது யார்? என்பதைக் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.