தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்
துர்கை கோயில் இடிப்பு; சாடிய இந்தியா... விளக்கமளித்த வங்கதேச அரசு!
வங்காளதேச நாட்டிலுள்ள டாக்காவிலிருக்கும் கில்கெட் பகுதியில் துர்கை கோயில் இடிக்கப்பட்டதற்கு தெளிவான காரணங்களை தெரிவித்துள்ளது வங்காளதேச அரசு. ரயில்வேவுக்கு சொந்தமாய் பாத்தியப்பட்ட நிலத்தில் ரயில்வே நிர்வாக அனுமதியின்றி சட்டவிரோதமாக துர்க்கை கோயிலை அமைத்திருந்ததால், அந்த கோயிலை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வங்காளதேச அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வங்காளதேச வெளியுறவு அமைச்சகம், "கடந்த ஆண்டு துர்கை பூஜையின் போது, முறையான அனுமதி எதுவும் பெறாமல், ரயில்வேவிற்கு சொந்தமான இடத்தில் இந்து மதம் பின்பற்றுவோர் தற்காலிக பூஜை மண்டப கட்டமைப்பை அமைத்து காளி சிலை வைத்திருந்தனர். இந்நிலையில், கொண்டாட்டம் நிறைவடைந்த பின் மண்டப அமைப்புகளை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கொண்டாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது ரயில்வே நிர்வாகம். ஆனால், அக்டோபர் 2024இல் கொண்டாட்டங்கள் முடிவடைந்த பின்னர் காளி சிலையை அகற்றத் தவறிய விழா அமைப்பினர், ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். மேலும், அனுமதியின்றி காளியின் உருவச்சிலையையும் நிரந்தரமாக நிறுவியுள்ளனர். மீண்டும் மீண்டும் பலமுறை நினைவூட்டியபோதும், துர்க்கை மண்டபத்தை நிரந்தரமாக்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகத்தின் முடிவுகளை மண்டப அமைப்பினர் கருத்தில் கொள்ளவில்லை.
உள்ளூர் சமூக பிரதிநிதிகள், மண்டப அமைப்பாளர்கள் ஆகியோரோடு ரயில்வே அதிகாரிகள் 2024 டிசம்பரில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தில், வங்காளதேச ரயில்வேவிற்கு சொந்தமான ரயில் பாதைகளின் இருபுறமும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்கள் ஆகிய அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளையும் அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போதுள்ள ரயில் பாதையின் வார்ப்பிலிருந்து 200 அடி தூரம் வரை ரயில்வேயின் நிலம்தான். மேலும், "டாக்கா-டோங்கி பிரிவில் 3வது மற்றும் 4வது டிஜி பாதை கட்டுமானம் மற்றும் வங்காளதேச ரயில்வேயின் டோங்கி-ஜாய்தேப்பூர் பிரிவில் இரட்டை ரயில் பாதை" என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்ற ரயில் பாதைகள் திட்டத்தை செயல்படுத்த, இந்த நிலம் மிகவும் அவசியமாக இருக்கிறது என்பதால் நிலத்தை அபகரித்திருப்போருக்கு பலமுறை அபகரிப்பு நிலத்திலிருந்து வெளியேறுமாறு வழியுறுத்தினோம்; ஆனால் பலனில்லை.
ஜூன் 24 மற்றும் 25 அன்று, துர்க்கை மண்டபம் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தையும் அகற்றுமாறு வங்காளதேச ரயில்வே இறுதியாக கேட்டுக்கொண்டது. ஜூன் 26 அன்று, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, கில்கெட் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளையும் அமைதியான முறையில் வங்களாதேச ரயில்வே அகற்றத் தொடங்கியது. கட்டமைப்பு அகற்றும் பணியின் போது, தற்காலிக மண்டபத்திலிருந்த துர்க்கை சிலை அருகிலுள்ள பாலு ஆற்றில் உள்ளூர் இந்து சமூக உறுப்பினர்களது பங்கேற்புடன் உரிய மரியாதையோடு கரைக்கப்பட்டது.
அரசாங்க நிலத்தை மீட்பதற்கு அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை அகற்றுவது வழக்கமான சட்டபூர்வ நடவடிக்கையாகும். அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் நாட்டின் சட்டம் பாகுபாடின்றி முழு பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ஆனால், எந்த சூழ்நிலையிலும் பொது நிலத்தை ஆக்கிரமித்து மதக் கட்டமைப்பு அமைக்க யாருக்கும் அனுமதி இல்லை. தற்காலிக துர்க்கை மண்டப அமைப்பாளர்கள் தங்கள் சொந்த ஒப்பந்தத்தை மீறியதால் ரயில்வே அதிகாரிகளின் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்திற்கு களங்கம் ஏற்படுத்தியியுள்ளனர்" என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "டாக்காவின் கில்கெட்டில் உள்ள துர்கா கோயிலை இடிக்க தீவிரவாதிகள் கூச்சலிட்டதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அரசாங்கம் கோயிலுக்கு பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக, இந்த கோயிலை சட்டவிரோத நில பயன்பாடாகக் காட்டி, கோயிலை அழிக்க அனுமதித்துள்ளது. இதன் விளைவாக, தெய்வத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்துக்களின் சொத்துக்கள் மற்றும் மத நிறுவனங்களைப் பாதுகாப்பது வங்காளதேச அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.