கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி ஜிஎஸ்டி: ராகுல் காந்தி!
ஜிஎஸ்டி என்பது பொருளாதார அநீதி மற்றும் கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ஜிஎஸ்டி வரி முறையை விமர்சனம் செய்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
“ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்து 8 ஆண்டுகள் ஆகிறது. ஜிஎஸ்டி என்பது வரி சீர்திருத்தம் அல்ல, இது பொருளாதார அநீதி. கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி. ஏழைகளை தண்டிக்கவும், சிறுகுறுத் தொழில்களை நசுக்கவும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கவும் பிரதமரின் கோடீஸ்வர நண்பர்களின் பலனுக்காக வடிவமைக்கப்பட்டது.
சிறந்த மற்றும் எளிமையான வரி என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஐந்து அடுக்கு வரி விதிப்பில் 900 முறைக்கு மேல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. கேரமல் பாப்கார்ன் மற்றும் கிரீம் பன்கள் கூட, வரி விதிப்பின் குழப்ப வலையில் சிக்கியுள்ளன.
சிறுகுறு தொழிலாளர்களும் வியாபாரிகளும் சாதாரண வர்த்தகர்களும் வரி விதிப்பால் மூழ்கிய நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதன் ஓட்டைகளைக் கடந்து செல்வதை ஆதரிக்கிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கக் கூடிய சிறுகுறு நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 8 ஆண்டுகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
கர்ப்பரேட் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி வரிச் சலுகையை அனுபவிக்கும் நிலையில், சாதாரண குடிமக்கள் டீ முதல் மருத்துவக் காப்பீடு வரை அனைத்துக்கும் ஜிஎஸ்டி செலுத்துகின்றனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் வேண்டுமென்றே ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், போக்குவரத்து துறையினர் மற்றும் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாஜக ஆளாத மாநிலங்களைப் பழிவாங்க ஜிஎஸ்டி ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மோடி அரசின் கூட்டாட்சிக்கு எதிரான செயல்பாட்டுக்கு சான்றாகும்.
இந்தியாவின் சந்தைகளை ஒன்றிணைத்து வரிவிதிப்பதை எளிமைப்படுத்தும் நோக்கில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தொலைநோக்கு யோசனையாக ஜிஎஸ்டி இருந்தது. ஆனால், மோசமான செயல்படுத்தல் மூலமாகவும் அரசியல் காரணங்களாலும் வாக்குறுதி ஏமாற்றப்பட்டுள்ளது.
சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மக்களை முன்னிலைப் படுத்துவதாகவும், வர்த்தகர்களுக்கானதாகவும் கூட்டாட்சி மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும்.
சலுகைகள் இல்லாமல் அனைவருக்குமான வரி முறை இந்தியாவுக்குத் தேவை. அப்போதுதான் சிறு கடைக்காரர் முதல் விவசாயி வரை அனைவரும் இந்திய வளர்ச்சிக்கான பங்குதாரராக இருக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi has criticized GST as an economic injustice and a brutal tool of corporates.