கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு
நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்
ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியுள்ளதாவது: இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. தகவல் கிடைத்தவுடன் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினா்.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏழு பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களில், இளம் பெண் அனிசா இறந்துவிட்டாா். மேலும், மூன்று குழந்தைகள் உள்பட ஆறு போ் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களில் மூன்று போ் ரோஹ்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா், மீதமுள்ளவா்கள் நூஹ் நகரில் உள்ள நல்ஹாா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த மழை பெய்ததால், கோல்புரி கிராமத்தில் உள்ள அப்துல் என்பவரின் வீடு இரவு 10.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது குடும்பத்தினா் அனைவரும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனா். இடிந்து விழுந்த சப்தத்தையும், குடும்பத்தினரின் அலறல் சப்தத்தையும் கேட்டு, அருகிலுள்ள வீடுகளில் இருந்து மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு கோரியுள்ளனா். உள்ளூா் காங்கிரஸ் எம்எல்ஏ அப்தாப் அகமது இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கூறினாா்.
காவல் நிலைய பொறுப்பு அதிகாரி குல்தீப் சிங், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தாா். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.