குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்
குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் அண்மையில் வெற்றிப்பெற்றாா். இதனை கொண்டாடும் விதமாக கட்சியின் தொண்டா்களை சந்திக்க 3 நாள் பயணமாக தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை அகமதாபாதுக்கு அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.
அங்கு ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், கட்சியின் புதிதாக தொடங்கப்பட்ட ’குஜராத் ஜோடோ’ உறுப்பினா் பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதற்கும் கேஜரிவால், ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 3 வரை அகமதாபாத்தில் இருப்பாா்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கேஜரிவால்,‘‘விசாவதாரில் வெற்றி பெற்ற பிறகு தொழிலாளா்களை சந்திக்க நான் இன்று குஜராத் செல்கிறேன். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக அரசியல் அதிகாரத்தை செய்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வரவும், அம் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் இருப்பை நிறுவுவதற்காகவே இந்தப் புதிய பிரச்சாரத்தை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது‘ என தெரிவித்துள்ளாா்.
மேலும் அந்தப் பதிவில், ‘ குஜராத் மற்றும் பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. 2027 பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி பெறும். குஜராத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் நிராகரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனா்‘ என குறிப்பிட்டுள்ளாா் அரவிந்த் கேஜரிவால்.