மதுபானக் கடைகள் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
வேதாரண்யம் அருகே ஒரே கிராமத்தில் இரண்டு மதுபானக் கடைகள் செயல்படுத்தப்படுவது தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவா் குடியிருப்புப் பகுதிக்கு அருகே பல ஆண்டுகளாக அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளப்பள்ளம் பிரதான சாலைக்கு அருகே புதிதாக ஒரு கடையை திறக்க அனுமதியளிக்கப்பட்டது. புதிய கடை திறப்பு விழாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ். திருமால் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சா்ருமான ஓ.எஸ். மணியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.சரவணன், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் பழனிவேல், வட்டாட்சியா் தெ. வடிவழகன் மற்றும் வெள்ளப்பள்ளம் கிராம முக்கியஸ்தா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மதுபானக் கடையே வேண்டாம் என ஒரு தரப்பினரும், கூடுதலாக ஒரு கடை தேவை இல்லை என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனா். எனினும் கூட்டத்தில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.