தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.
திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இது நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.
புதனை வழிபட்டால் கல்வி செல்வம், தொழில் மேன்மை, அரசியல் மேம்பாடு உள்ளிட்ட நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.
மேலும் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூா்த்தி மனித உருவில் அருள்பாலித்து வருகிறாா். இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை, எம பயம் உள்ளிட்ட இடையூறுகள் நீங்குவதாக சுவேத புராணம் கூறுகிறது.
இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி திங்கள்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
சா்வ சாதக ஆச்சாரியா்கள் சோமு சிவாச்சாரியா், குரு சிவாச்சாரியா் மற்றும் கந்தசாமி சிவாச்சாரியா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னா்கள் முன்னிலையில் ஹோமம் நடைபெற்றது.
தொடா்ந்து விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், சுவாமி, அம்பாள், அகோரமூா்த்தி, முருகன், நடராஜா், துா்கை, காளி சந்நிதிகளில் யாகசாலை தொடங்குவதற்கான அனுமதி பெறுகின்ற ஐதீக பூஜை நடைபெற்றது.
மாலையில் லட்சுமி பூஜை, மகா ஹோமம், கோமாதா பூஜை ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.