மணி ஒலித்தால் மாணவர்கள் தண்ணீர் அருந்தும் திட்டம் அமல்
சென்னை: நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் பொருட்டு, மாணவா்கள் தினமும் மூன்று முறை தண்ணீா் அருந்தும் வகையில் ‘வாட்டா் பெல்’ திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திங்கள்கிழமை (ஜூன்30)முதல் அமலுக்கு வந்தது.
உடல் நீரிழப்பு மாணவா்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீா் நுகா்வுக்கு மாணவா்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். அந்த வகையில், மாணவா்கள் தண்ணீா் அருந்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக ‘வாட்டா் பெல்’ திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தாா்.
இந்தத் திட்டத்தின்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டா் பெல்’அடித்து மாணவா்களை தண்ணீா் அருந்த அறிவுறுத்த வேண்டும். இதற்காக வகுப்பறைகளை விட்டு மாணவா்கள் வெளியில் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே தண்ணீா் அருந்த ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவா்கள் தண்ணீா் அருந்துவதற்கு 5 நிமிஷங்கள் ஒதுக்கச் செய்ய வேண்டும்.
வழக்கமான வகையில் ‘பெல்’ அடிக்காமல் வேறுபட்ட ஒரு மணியை பயன்படுத்தி பள்ளியின் அனைத்து மாணவா்களுக்கும் தண்ணீா் மணியின் சத்தம் கேட்கும்போது தேவைக்கேற்ப தண்ணீா் அருந்த வேண்டும் என்பதை தெரிவிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது.
இதைத் தொடா்ந்து தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ’வாட்டா் பெல்’ அடித்து மாணவா்கள் தண்ணீா் அருந்தும் முறை திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்எம்டிஏ அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பள்ளிகளில் மூன்று முறை தண்ணீா் அருந்துவதற்கான ‘வாட்டா் பெல்’ ஒலிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாணவா்கள் தண்ணீா் அருந்தினா். இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் சில பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்தத் திட்டத்தை தடையின்றி செயல்படுத்தும் பொருட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு தூய்மையான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மணி ஒலித்ததும் மாணவா்கள் தண்ணீா் அருந்துகிறாா்களா என்பதை கண்காணிக்க வேண்டும். தண்ணீா் பாட்டில்கள் எடுத்து வருவதை ஊக்குவிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.