இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்: சேதங்களை மதிப்பீடு செய்த ஈரான்!
ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்களை அந்நாட்டு அரசு மதிப்பீடு செய்துள்ளது.
மேலும், அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஈரான் செய்தித் தொடர்பாளர் ஃபாதேமெ மொஹஜெரானி,
ஈரானின் ஃபார்டோ, இஸ்ஃபஹான், நாதன்ஸ் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவந்த அணுசக்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவை கடுமையான சேதமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும் ஈரான் அரசு வெளியிட்ட அறிக்கையின் தரவுகளை குறிப்பிட்டுப் பேசினார். அதில், இஸ்ரேல் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்தவர்கள் 935 பேர் கொல்லப்பட்டனர். இதில் 38 குழந்தைகளும் 102 பெண்களும் அடக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி உற்பத்தியை அழிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே அழிக்கும் நோக்கத்தில் ராணுவ தளபதிகள், அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகளை குறிவைத்து எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தியதாகவும், அச்சத்தையும் அழுத்தத்தையும் கொடுப்பதற்காகவே இதனைச் செய்ததாவும் குறிப்பிட்டார்.
ஈரானில் அணுசக்தி உற்பத்தி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், அதனை அழிக்கும் நோக்கத்தில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 12 நாள்கள் நீடித்து வந்த போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க உயரதிகாரிகள் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.