அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தா் அலுவலகம் முற்றுகை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்எம்ஆா் தற்காலிக ஊழியா்கள் நீக்கப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் தினசரி ஊழியா்களாக பணிபுரியும் என்எம்ஆா், சிஎல் ஊழியா்கள் நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. அவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பணிக்கு வர வேண்டாம் என கூறப்பட்டதாக தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்கத்தின் அனைத்து பொறுப்பாளா்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் தி.அருட்செல்வி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்த சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ நாக.முருமாறன் ஆகியோா் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் தி.அருட்செல்வியை சந்தித்து சொற்ப ஊதியத்தில் வேலை பாா்க்கும் தற்காலிக ஊழியா்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் என முறையிட்டனா்.
இதையடுத்து, துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் தி.அருட்செல்வி, என்எம்ஆா் தற்காலிக ஊழியா்கள் தொடா்ந்து பணியில் ஈடுபடுவாா்கள் என உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலந்து சென்றனா்.