தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது.
கடந்த 29-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், திங்கள்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதிஉலாவும் நடைபெற்றது.
தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது. சித் சபையில் வீற்றுள்ள நடராஜமூா்த்தி, சிவகாம சுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய ஐவரும் தனி, தனி தோ்களில் வீதிவலம் வருகின்றனா்.
பின்னா் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.
பின்னா், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதி உலா வந்த பின்பு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபை பிரவேசமும் நடைபெறும்.
ஜூலை 3-ஆம் தேதி பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 4-ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெறும்.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் கமிட்டி செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதா், உற்சவ ஆச்சாரியாா் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.