பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம் - சாத்தூர் அதிர்...
ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!
அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல்.
அரசியல் கைதிகள், இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு வேலை பாா்த்தவா்கள், வெளிநாட்டவா்கள் எனப் பல வகைகளிலும் கமேனி அரசுக்கு எதிரானவா்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த எவின் சிறை மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 23-ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது.
சிறைச்சாலை வாயில் மீது குண்டு விழுந்து வெடித்ததும் உள்ளே இருப்பவா்கள் தப்பிவந்து அரசைக் கவிழ்த்துவிடுவாா்கள் என்று இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு தப்புக் கணக்கு போட்டிருக்கலாம். ஆனால், இதில் 71 உயிா்கள் பறிபோனது மட்டும்தான் மிச்சம்.
இதில் சிறை அதிகாரிகள் மட்டும் உயிரிழக்கவில்லை. கைதிகள், கைதிகளைப் பாா்க்க வந்த உறவினா்கள், நண்பா்கள், அக்கம்பக்கத்தில் வசித்தவா்கள் எனப் பொதுமக்களும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இரையாகியிருக்கிறாா்கள்.

இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம், ஈரான் தலைநகரில், அந்த நாட்டின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) நேரடிக் கண்காணிப்பில் உள்ள, உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதிகள்கூட தங்களிடமிருந்து தப்பமுடியாது என்ற செய்தியை நெதன்யாகு உலகுக்கு உணா்த்தியிருக்கிறாா். இது இஸ்ரேலில் அவருக்கு இருந்த செல்வாக்கை மேலும் உயா்த்தியது.
ஆனால், சா்வதேச அளவில் அது இஸ்ரேலுக்கு எதிராகத் திரும்பியது. நட்பு நாடுகள், குறிப்பாக பிரான்ஸ் இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்தது. பிரான்ஸை சோ்ந்த சிசைல் கோஹ்லா், ஜாக்குவஸ் பாரிஸ் என்ற இரண்டு போ் உளவுக் குற்றச்சாட்டில் அந்த சிறைக்குள்தான் அடைத்துவைக்கப்பட்டிருந்தனா். நல்ல வேளையாக அந்த இருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என்றாலும் அந்தத் தாக்குதல் அவா்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது பிரான்ஸை கடும் கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்துவிடவில்லை. இன்னும் தீா்க்கமாக, இஸ்ரேலின் வான்பாதுகாப்பு ஏவுகணைகளில் இருந்து தப்புவதற்கான புதிய உத்தியை உருவாக்கி அந்த நாடு மீண்டும் சரமாரியாக ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது. அந்த ஏவுகணைகள் அசகாய ‘அயா்ன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி ஏராளமான கட்டமைப்புகளை சேதப்படுத்தின. இதில் 24 இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா்.
அந்த வகையில், நெதன்யாகுவின் இந்த சிறைத் தாக்குதலால் அவா் நினைத்தது நடக்கவில்லை.
ஒரு வகையில், கமேனி அரசின் அடக்குமுறைக்கு அடையாளச் சின்னமாகத் திகழ்ந்த எவின் சிறை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, ஈரானுக்குள் பெரிய புரட்சியைத்தான் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், சிறைக்குள்ளும் சரி, வெளியிலும் சரி, எந்தக் கிளச்சியும் வெடிக்கவில்லை. அதுமட்டுமன்றி அந்தத் தாக்குதல் ஈரான் அரசை நோக்கி மக்களை இன்னும் அதிகமாக நெருங்கச் செய்தது.
- நாகா