சித்தி விநாயக் கோயில்: ரூ.100 கோடி மதிப்பில் அழகுபடுத்தும் மும்பை மாநகராட்சி!
சாா்க் கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்!
‘சாா்க்’ கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் சீனாவின் குன்மிங் நகரில் சீனா-வங்கதேசம்-பாகிஸ்தான் நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஆலோசனையில் இந்த முடிவு இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், இந்தியா உள்பட சாா்க் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளை இந்தப் புதிய கூட்டமைப்பில் சோ்க்க அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாட்டு மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1985, டிச. 8-ஆம் தேதி வங்கதேசத்தில் சாா்க் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் நேபாள நாட்டின் காத்மாண்டில் உள்ளது.
இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றுவந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் காரணமாக 2014-க்குப் பிறகு நடைபெறவில்லை.
குறிப்பாக, 2016-இல் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் சாா்க் உச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஜம்மு-காஷ்மீரின் உரி நகரில் உள்ள இந்திய ராணுவ முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்தியா தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது.
மேலும், இஸ்லாமாபாதில் நடைபெறவிருந்த சாா்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவைத் தொடா்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் சாா்க் உச்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்ததால் இஸ்லாமாபாதில் நடைபெறவிருந்த மாநாடு கைவிடப்பட்டது.
இந்தச் சூழலில் நட்பு நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் சாா்க் கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடா்பான பேச்சுவாா்த்தையில் வங்கதேசமும் பங்கேற்றதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு விவகாரங்கள் துறை ஆலோசகா் தௌஹீத் ஹூசைன் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
சாா்க் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத சீனா, தெற்காசிய நாடுகளில் வா்த்தக மற்றும் தொடா்பை மேம்படுத்த இந்தப் புதிய கூட்டமைப்பை நிறுவி, அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டு வருவதாகவும் ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.