2025 - தமிழ் சினிமாவுக்கு முதல் ஆறு மாதம் எப்படி இருந்தது?
இந்தாண்டின் முதல் ஆறு மாதம் முடிவடைந்த நிலையில் தமிழ் சினிமா குறித்து ஒரு பார்வை...
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவிலிருந்து தயாராகும் படங்களின் பட்ஜெட் மற்றும் பான் இந்திய கதைகள் அதிகரித்தே வருகின்றன. இந்தாண்டு துவங்குவதற்கு முன்பே என்னென்ன படங்கள் 2025-ல் வெளியாகும் என்பது குறித்து சில ஊகங்கள் இருந்தன.
அப்படி, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்ன? அவை வெற்றிகளைப் பெற்றதா, இல்லையா என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தாண்டில் இதுவரை வெளியான திரைப்படங்கள்..
இந்தாண்டு ஜனவரியிலிருந்து ஜூன் வரை தமிழ் சினிமா 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. இதில், வணங்கான், மத கஜ ராஜா, காதலிக்க நேரமில்லை, குடும்பஸ்தன், விடாமுயற்சி, டிராகன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், வீர தீர சூரன் - 2, டெஸ்ட், குட் பேட் அக்லி, ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி, டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன், தக் லைஃப், குபேரா ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படங்களாகும். ஆனால், இவற்றில் சில படங்களே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.
வணிக வெற்றியைப் பெற்ற திரைப்படங்கள்...
மேலே சொன்ன படங்களில் எதிர்பாராத விதமாக விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் இந்தாண்டின் முதல் ரூ. 50 கோடியைக் கடந்த படமாக அமைந்தது. தொடர்ந்து, மணிகண்டனின் குடும்பஸ்தன் படம் நல்ல வெற்றியைப் பெற்று விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. முக்கியமாக, நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லியும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. வீர தீர சூரனும் பட்ஜெட்டுக்கு ஏற்ப வசூலித்தது.
ஆனால், இப்படங்களையெல்லாம் விட கதை ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அட்டகாசமான வரவேற்பைப் பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 92 கோடி வரை வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதர்வா நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றது.
தோல்வியைச் சந்தித்த படங்கள்...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதேபோல், இயக்குநர் பாலாவின் வணங்கான், ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை, தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகிய படங்கள் வணிக தோல்வியைச் சந்தித்தன.
ஆனால், இப்படங்களைவிட இந்தாண்டில் இதுவரையிலான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்த படமாக தக் லைஃப் கருதப்படுகிறது. கமல் ஹாசன், மணிரத்னம், சிம்பு என நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் கடுமையான விமர்சனங்களையே பெற்றது.
தனுஷின் குபேரா படம் தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. ஆனால், தெலுங்கில் வெற்றி அடைந்துள்ளது.
ஆச்சரியப்படுத்திய சிறிய பட்ஜெட் படங்கள்...
எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வெளியாகி, வணிக ரீதியாகத் தோல்வியைச் சந்தித்தாலும் விமர்சன ரீதியாக சில படங்கள் நன்றாகப் பேசப்பட்டன.
அதில், காதல் என்பது பொதுவுடைமை, ஜெண்டில்வுமன், எமகாதகி, நாங்கள், மனிதர்கள், மெட்ராஸ் மேட்னி உள்ளிட்ட படங்கள் பல சினிமா விமர்சகர்களிடம் நல்ல பாராட்டுகளைப் பெற்றிருந்தன.

மேலும், நடிகர் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான லெவன் திரைப்படம் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் நிறைய பேரை அப்படம் ஈர்த்திருக்கிறது.
இந்தாண்டில் இதுவரை வெளியான படங்களின் நிலை இதுதான். இறுதி வாரமான ஜூன் 27 ஆம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன் படமும் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் வணிக வெற்றியை ஈட்டும் என்றே தெரிகிறது.
இனி மீதமுள்ள அடுத்த 6 மாதங்களில் கூலி, மதராஸி, இட்லி கடை, டூட், பைசன், சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் சர்தார் - 2 உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவுள்ளதால் இந்தாண்டு தமிழ் சினிமாவுக்கு பெரிய ஆண்டாகவே இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராமாயணா அப்டேட்!
As the first six months of this year come to an end, here's a look at Tamil cinema...