'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம்: முதல்வர் அறிவிப்பு!
'காலனி' என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
இது குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகிறபோது குறிப்பிட்டார், வெளிநாடு தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய இடங்களில் கண்காணிப்பு தேவை என்று பேசியிருக்கிறார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியக்கூடிய வெளிநாடு தொழிலாளர்கள் அனைவரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்கப்படுகிறார்கள்.
அதேபோல் பேரவை உறுப்பினர் கோ.க. மணி கேட்டுக்கொண்டபடி, அவருடைய தொகுதியிலே தருமபுரி காவல் உட்கோட்டம், மதிகோன்பாளையம் காவல் வட்டத்தில் அமைந்துள்ள புலி கிராமத்தில் புதிய காவல் நிலையம் 2 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசிய அத்தனை விவகாரங்களிலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இனியும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு, இந்த அரசை பொறுத்தவரைக்கும் எந்தவித அழுத்தங்களுக்கும் உள்ளாகாமல் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் நீதியை நிலை நாட்டுவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்க: வலுக்கட்டாய நடவடிக்கையால் கடன் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்