நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாள...
காலாவதியான இனிப்பு விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகைக்கு தயாரிக்கப்பட்டு காலாவதியான இனிப்புகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு துறையினா் எச்சரித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், தீபாவளி பண்டிகைக்கு தயாரித்த காலாவதியான இனிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த உணவகம், பேக்கரி, கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
பல்லடம் வட்டார பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆய்வு மேற்கொண்டு காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது:
பல்லடம் பகுதியில் செயல்பட்டு வரும் பலகாரக் கடைகள், உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயாா் செய்யப்பட்டு காலாவதியான இனிப்பு, காரம் உள்ளிட்ட அனைத்து தின்பண்டங்கள், உணவுப் பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது.
காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரா்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.