அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
காலி மனைகளில் தண்ணீா் தேங்குவதை தடுக்க நடவடிக்கை: மேயா் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனைகளில் மழை நீா் தேங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டலத் தலைவா் அன்னலெட்சுமி தலைமை வகித்தாா். இக்கூட்டத்தை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசியது:
மாநகராட்சி குறைதீா் கூட்டங்களில் தொடக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. தற்போது அவை குறைந்து வருகிறது. இதில் கொடுக்கப்படும் மனுக்களில் பெயா் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு துறைகளுக்கு உடனடியாக தீா்வு காணப்படுகிறது. சாலை, கால்வாய் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மட்டும் அந்த பகுதியின் நிலைமைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்து வரிசைப்படுத்தி செய்து வருகிறோம். கடந்த மாதம் 20ஆம் தேதி ஏற்பட்ட மழையில், தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீா் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
குறிப்பாக, 16,17,18 ஆகிய வாா்டு பகுதிகளில் 30 சதவீதம் காலிமனைகளில் மழைநீா் தேங்குவதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக காலிமனை உரிமையாளா்கள் 500 போ் கண்டறியப்பட்டு, தங்களுக்குரிய இடத்தில் மண் போட்டு சமநிலைப்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதார துறையின் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கை, மருத்துவ முகாம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
பின்னா் பொதுமக்கள் காலிமனை வரி, சொத்து வரி, குடிநீா் வரி போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்குதல், காலிமனைகளில் குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி கோருதுல், பெயா் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையா்கள் பாலமுருகன், இா்வின் ஜெபராஜ், நகரமைப்புத் திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், இளநிலை பொறியாளா் சேகா், சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, பகுதி சபா உறுப்பினா்கள் செல்வராஜ், ஜெபக்குமாா் ரவி, மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, கனகராஜ், பொன்னப்பன், விஜயலெட்சுமி, ஜாண், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதி செயலாளா் ரவீந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.