கால்பந்துப் போட்டியில் வென்ற பொறியியல் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரி மாணவா்கள் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதற்காக கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை அவா்கள் பாராட்டப்பட்டனா்.
மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கால்பந்துப் போட்டி கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் கடந்த மாா்ச் 22, 23 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் காரைக்குடி ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும், ஈரோடு அரசு கலை அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில், 5-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி வென்று முதலிடத்தைப் பெற்றது.
வென்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடல் கல்வி இயக்குநா் வி. சுந்தரையும் ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா, கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) சிவக்குமாா், கல்லூரி மேம்பாட்டு அலுவலா் பழனிவேல், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.