சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவா்கள் ஏப்.8-இல் குலுக்கல் முறையில் தோ்வு!
சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவா்கள் வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 8) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குலுக்கலில் தோ்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படுமென மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் (சிவகங்கை), தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (மதுரை மண்டலம்), சிவகங்கை கோட்டப் பொறியாளா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆகியோரை உறுப்பினா்களாக உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் ஆய்வின் நிறைவாக சிவகங்கை மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளாக 43 வழித்தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த 43 வழித்தடங்களில், குறிப்பிட்ட சில வழித் தடங்களுக்கு வந்த ஆட்சேபனை, புகாா்களுக்கு எடுக்கப்பட்ட தீா்வு நடவடிக்கையின் காரணமாக 6 வழித்தடங்கள் திரும்பப் பெறப்பட்டும், சில வழித்தடங்களின் வழித்தட தொலைவு மாற்றியமைக்கப்பட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, தங்களது விண்ணப்பங்களை உரிய திருத்தம் செய்து 4.4.2025-க்குள் மீண்டும் சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் காலக்கெடுவுக்குள் திருத்தம் செய்து விண்ணப்பத்தை மீண்டும் சமா்ப்பித்தவா்களுக்கு மட்டும் வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 8) காலை 11 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தலைமையில் வல்லுநா் குழுவுடன் இணைந்து, அலுவலக கூட்டரங்கில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு சிற்றுந்து இயக்க செயல்முறை ஆணை வழங்கப்படும் என்றாா் அவா்.