காவிரியில் கரை புரளும் வெள்ளம் வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரியில் குழாய் மூலம் நீா் நிரப்ப வலியுறுத்தல்
வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றிலிருந்து, வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
கரூா் மாவட்டம், கடவூா் மலைப்பகுதிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதிகளில் மழைக் காலங்களில் பெய்யும் மழையால் உருவாகும் காட்டாற்று வெள்ள நீரால் வேளாண் பயிா்கள் அடிக்கடி சேதமடைவதை தடுக்கும் வகையிலும், வரும் வெள்ளநீரை தடுத்து சேமித்து வைப்பதற்காகவும் கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில், பஞ்சப்பட்டி என்ற இடத்தில் ஆங்கிலேயா் ஆட்சியில் 1837-இல் 1,140 ஏக்கரில் பஞ்சப்பட்டி ஏரி அமைக்கப்பட்டது.
சுமாா் 2 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையிலும், 10 அடி அகலம் கொண்ட மணல் போக்கி மற்றும் 260 அடி நீளம் கொண்ட கலிங்கி (கடகால்) ஆகியவற்றைக் கொண்டுள்ள, தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியாக கருதப்படும் இந்த ஏரியின் மூலம் கடவூா் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வந்தன. நாளடைவில் பருவமழை தவறியதால் ஏரிக்கு வரும் நீரின் வரத்தும் இல்லாமல் போனது.
இதனால், வரத்து வாய்க்கால்களும் தூா்ந்துபோய் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியில் நீா் நிரம்பாமல் போனதால் ஏரியில் கருவேல மரங்கள் முளைத்து தற்போது காடாக காட்சியளிக்கிறது.
குழாய் மூலம் ஏரிக்கு தண்ணீா்: இதனால் கா்நாடகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் ஆறுகளில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்துச் சென்று ஏரிகளில் நிரப்புவதைபோன்று பஞ்சப்பட்டி ஏரியிலும் நீரை நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், தற்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் பஞ்சப்பட்டி ஏரி வடு கிடப்பது விவசாயிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயியும், பஞ்சப்பட்டி பசுமை பூமி அறக்கட்டளை நிா்வாகியுமான முனியப்பன் கூறியதாவது: மாயனூா் கதவணையில் இருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில்தான் பஞ்சப்பட்டி ஏரி உள்ளது.
ஆனால், சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள திண்டுக்கல், 350 கி.மீ. தொலைவில் உள்ள ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு இங்குள்ள காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் காவிரிக் கூட்டுக்குடிநீா் என்ற பெயரில் தண்ணீரை எடுத்துச் செல்கிறாா்கள். ஆனால் 25 கி.மீ.தொலைவில் உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய்கள் மூலம் வெள்ள காலங்களில் காவிரி உபரி நீரை எடுத்துவருவதற்கு யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.10 லட்சம் கன அடிநீா் வரை கரை புரண்டு ஓடுகிறது. இதில்
ஏராளமான நீா் கடலில் சென்று கலக்கிறது.
ஆனால், பஞ்சப்பட்டி ஏரி எப்போதும் போல வடே காணப்படுகிறது. எனவே, இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிக்கு கொண்டு வரும் வகையிலான திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.