`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
‘கரூரில் 7 மாதங்களில் ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல்’
கரூா் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தப்பட்ட ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொதுமக்களுக்கு அரசு சாா்பில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை கடத்தி, கள்ளச்சந்தையில் சிலா் விற்று அதிக லாபம் பெறுவதை தடுக்கும் வகையில், கரூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா் தொடா்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சாா்பில் மொத்தம் 6,025 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 2,342 டன் அரிசி, 13,720 லிட்டா் மண்ணெண்ணெய், 1,725 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் என ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2,880 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய அபராதம் செலுத்திய பிறகு அவை விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்களை விற்ற 70 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
ரேஷன் பொருள்கள் கடத்துவோா் குறித்த புகாா்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.