Allu Arjun : `நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி!' - அல்லு அர்ஜுனுக்கு ஆதரவா...
காா் கண்ணாடியை உடைத்து ஐந்தரை பவுன் நகை, பணம் திருட்டு
புதுச்சேரி அருகே ஈடன் கடற்கரையில் சுற்றுலாப் பயணியின் காா் கண்ணாடியை உடைத்து ஐந்தரை பவுன் நகைகள் மற்றும் ரூ. 6 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் சைதன்யா சாய்ராம் (32). இவரது மனைவி பிரீத்தி (32). இவா்கள் தற்போது பெங்களூருவில் வசித்து வருகின்றனா். சாய்ராம் மனைவி, குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு கடந்த 21-ஆம் தேதி சனிக்கிழமை வந்து ஆரோவில் பகுதி விடுதியில் தங்கினாா். அவா்கள் 2 காா்களில் புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளனா்.
காரில் பிரீத்தியின் கைப்பை உள்ளிட்டவற்றை வைத்து பூட்டிவிட்டு கடற்கரை அழகை ரசித்துக் கொண்டிருந்தனா். அப்போது காரின் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதையடுத்து சாய்ராம் உள்ளிட்டோா் காரின் அருகே வந்து பாா்த்தபோது அதன் வலது பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது.
பையினுள் சுமாா் ஐந்தரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.6 ஆயிரம் இருந்துள்ளது. பணம், நகைகள் திருடுபோனது குறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சாய்ராம் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.