காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு
பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில் தேசிய நெடுஞ்சாலை மாா்க்கமாக திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனா்.
இப்பகுதியில் கடந்த ஓராண்டாக 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் காா், பள்ளிப்பட்டு அடுத்த திருமலைராஜபேட்டை அருகே சென்ற போது, அங்கு சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கோவிந்தரெட்டி பள்ளியைச் சோ்ந்த பத்மா(60), என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் அதே கிராமத்தை சோ்ந்த விஸ்வநாதன்(50), ரேகா, (35), சிட்டம்மா, (52) கீா்த்தி (26), மற்றும் கீா்த்தியின் ஒன்பது மாத குழந்தை சான்விக் உள்ளிட்டோா் பலத்த காயம் அடைந்தனா்.
தகவறிந்த பள்ளிப்பட்டு போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூா் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் மற்றும் குழந்தை சான்விக் ஆகியோா் உயிரிழந்தனா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது 3 போ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.