காா் மோதியதில் முதியவா், மூதாட்டி பலத்த காயம்
ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஐயப்ப பக்தா்களின் காா் மோதியதில் வேடசந்தூரைச் சோ்ந்த முதியவா், மூதாட்டி புதன்கிழமை பலத்த காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த தடா பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ், லோகேஷ், பச்சையப்பன், கந்தன் ஆகியோா் சபரிமலை யாத்திரைக்கு காரில் வந்தனா். சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பழனிக்கு வந்தனா். பின்னா், அங்கிருந்து ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் வழியாக திருச்சிக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். வடமதுரை சாலையில் சென்ற போது, டயா் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மீதும், மூதாட்டி மீதும் மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வேடசந்தூா் கோகுல்நகரைச் சோ்ந்த பிச்சைமுத்து (70), நடந்து சென்ற மூதாட்டி பெரியக்கா (80) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். காரில் வந்த 4 பேரும் காயமின்றி தப்பினா்.
இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.